top of page
  • nalayiniindran

தோம்புகள் -

Updated: Oct 10, 2021

இலங்கையில் போர்த்துக்கேயர் மற்றும் ஒல்லாந்தர் கால நிர்வாகப்பதிவேடுகள்


தோம்பு என்றால் என்ன

தோம்பு என்பது 17ம் நூற்றாண்டில் போர்த்துக்கேயர் காலப்பகுதியில் நில உடைமைகளை பதிவு செய்யும் ஒரு பதிவேடாக இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டது. போர்த்துக்கேயர் இப்பதிவு செய்யும் முறைமையினை 1608 இல் ஆரம்பித்திருந்தார்கள். போர்த்துக்கேயர்காலத்தில் பாவிக்கப்பட்ட நிர்வாகப் பதிவேடுகள் தோம்புகள் உட்பட பல, ஒல்லாந்த ஆட்சியாளர்கள் இலங்கையை கைப்பற்ற முன்னரே போர்த்துக்கேயர்களால் அழிக்கப்பட்டு விட்டன.. ஆயினும், ஒல்லாந்தர் போர்த்துக்கேயர்களைப் பின்பற்றி மட்டுமல்லாது, பின்பு இவை 17/18 ம் நூற்றாண்டு காலத்தில் ஓல்லாந்து ஆட்சியாளர்களால் புதுமைப்படுத்தப்பட்டு பாவிக்கப்பட்டது. இவை இன்னமும் காணிகள் தொடர்பான பிரச்சனைகளை தீர்ப்பதற்கு கூட பல இடங்களில் உதவுகிறது என்பது முக்கியமானது.


போர்த்துக்கேயர்களைத் தொடர்ந்து ஒல்லாந்தர்களும் மக்கள் மற்றும் காணிகளின் விபரங்கள், தொழிலாளர்களது சேவைகள் என்ற விபரங்களை பதிவு செய்யும் முறைமையை ஆரம்பித்திருந்தார்கள்.


இந்நிர்வாக பதிவேடுகளான தோம்புகள் பல தரப்பட்ட தரவுகளை கொண்டதாக இருந்தன. ஆயினும் ஊட, தரவுகள் சரியான முறையில் பெறப்பட்டனவா, எல்லோருடைய விபரங்களையைம் உள்ளடக்கியதா என்பதில் பல வித கருத்து முரண்பாடூகள் உண்டு. ஆனாலும் தோம்புகள் வரலாற்று மக்கள் எண்ணிக்கை விபரங்களை கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவற்றில் பெரும்பாலான தோம்புகள் இலங்கை தேசிய சுவடிகள் காப்பக திணைக்களத்தில் பேணப்பட்டு வருகின்றன.


தோம்பு என்பதன் உண்மையான பொருள், பழக்கத்திலிருந்து அருகி விட்டதும் பேசப்படாததுமான ஒரு விடயமாகி விட்டது. ஆனாலும் கூட அதன் பெறுமதிகள் அறியப்படாமலேயே தனிப்பட்ட பாதுகாப்பில், தமிழ் மக்களிடையே வீடுகளில் கூட சேகரித்து வைக்கப்பட்டுள்ளமையையும் அறியக்கூடியதாக இருக்கின்றது.


ஒல்லாந்தர்கால வரலாற்று ஆராய்ச்சிகளூக்கு தோம்புகள், ஒல்லாந்தர் அரசியல் சபை நிமிட அறிக்கைகள் முக்கியமான ஆவணங்களாக கருதப்படுகின்றது. தோம்புகள், காணி தோம்புகள், தலை தோம்புகள் மற்றும் பாடசாலை தோம்புகள் என வகைப்படும்.(Archival Documents for Research, 1992).


அரசியல் சபை நிமிட அறிக்கைகள் மூலம், வாடகை, வரிகள் ; மக்களின் பழக்க வழக்கங்கள், கல்வி திட்டங்கள், விவசாயம், பொது வேலைத்திட்டங்கள், கலவரங்கள், நிர்வாக அரச இராணுவ நிலைமைகள், கிராம மக்களது மனுக்கள் என பல விடயங்களை அறிந்து கொள்ளக்கூடியதாக இருக்கின்றது.


அதேபோல், தோம்புகளிலிருந்து, ஒல்லாந்த ஆட்சியின் கீழ் உட்பட்டிருந்த பிரதேசங்கள், சனத்தொகை, மக்களால் செய்யப்பட வேண்டிய கடமைகள், ஒல்லாந்த அரச அதிகாரிகிடமிருந்து மக்கள் பெற்ற முன்னுரிமைகள் மற்றும் அலர்களுக்கான உரிமைகள், என்னென்ன பிரிவுகளின் கீழ் நிலங்களை மக்கள் வைத்திருந்தார்கள், விவசாயம் செய்யப்படாமல் இருந்த நிலங்களில் எவை தோட்டங்களாகவும் வயல்களாகவும் மாற்றுவதற்கு உகந்தவையாக இருந்தன என பல விடயங்களை அறியக்கூடியதாக இருக்கின்றது.


தோம்புகள் உருவாக்கப்படுவதற்கான காரணங்கள்


"சனத்தொகை மற்றும் கிராமங்கள், மாவட்டங்களில் உள்ள சொத்துக்கள் போன்றவற்றின் புள்ளிவிபர பதிவுகளாக/ பதிவேடுகளாக இருந்தன. மற்றும்

இவை, நிலவரிகள் மற்றும் நிலப்பிரபுத்துவ சேவைகளிலிருந்து நிறுவனங்களின் வருமானங்கள் (revenue) மற்றும் இதர வளங்களின் பொருளாதார கணக்கெடுப்பாகவும் இருந்தன"(Mottau, S. W., 1953)


காணி உறுதிகள் இல்லாத ஒரு காலத்தில் காணிகளின் உரிமையை காட்டக்கூடிய உண்மையான ஒரு சான்றிதழ் பத்திரமாகக்கூட கருதப்பட்டது.


ஒல்லாந்தர்களது தோம்புகளிலிருந்து எடுக்கப்பட்ட சான்றுகளுக்காக சராசரியாக 450 மேற்பட்ட விண்ணப்பங்கள் மேற்கொள்ளப்பட்டன எனவும் இவ்வாறான வகையில் அரசாங்கத்திற்கு சிறிய ஒரு வருமானத்தினை கொடுக்கக்கூடிய ஆதாரமாக இருந்தன எனவும் அறிய முடிகிறது.


"இத்துடன் தொடர்பாக, நியாயமான இடைவெளியில் நடைபெற்ற மூன்று முக்கிய பதிவுகளுக்கு மூன்று வெவ்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்தன.


1. முதலாவது பதிவானது, ஆளுநர் Van Gollenesse ன் அறிவுறுத்தலுக்கிணங்க 5th June 1742 இலிருந்து 6th August 1759 வரை மேற்கொள்ளப்பட்டது.


2. மீளமைப்பானது ஆளுநர் Schreuder லினால் கொடுக்கப்பட்ட உத்தரவாகும். இது 9th June 1760 தொடக்கம் 13th November 1761 வரையில் நடைபெற்றது.


3. புதிய தோம்ப தொகுப்பானது ஆளுநர் Falck லினால் கொடுக்கப்பட்ட உத்தரவாகும். இது 5th September 1766 தொடக்கம் 9th September 1771 வரை நடைபெற்றது" (Mottau, S. W., 1953).


தோம்புகள் பதியும் வேலைகள் ஏறக்குறைய 17 வருடங்களாக நடைபெற்று மேலும் பல வருடங்களாக அடுத்து வந்த 5 ஆளுநர்கள் காலம் வரை நீடித்ததாக அறியக்கூடியதாக இருக்கின்றது. மேலும் இப்பதிவு அமர்வுகளுக்கு மக்கள் வருவதும் பல வித காரணங்களினால் தடைப்பட்டதாகவும் அறிய முடிகிறது. பொதுவாக, வெள்ளப்பெருக்கு, சுகவீனங்கள், அறுவடை , தொற்றுநோய்கள் போன்ற பல வித காரணங்களினால் அல்லது அவ்வாறான சாக்கு போக்குகளினால் பாதிக்கப்பட்டும் உள்ளது. கிராமங்களில் ஏற்பட்ட அம்மை போன்ற தொற்று நோய்களினால் ஆளுநர்களை இவ்வாறான நடவடிக்கைகளுக்கு அனுப்புவதும் தடைப்பட்டதாக கருதப்படுகிறது.


உசாத்துணை - கட்டுரைகள்


Mottau, S. W. “Documents on Ceylon History (2): Documents Relating to the Tombo Registration of the Dutch Administration in Ceylon: Instructions Issued to the Tombo Commissioners.” Ceylon Historical Journal 3:2 (1953).


ARCHIVES HOLDINGS

Department of Naional Archives. 2021. Archives Holdings. [online] Available at: <http://www.archives.gov.lk/> [Accessed 10 October 2021].


ARCHIVAL DOCUMENTS FOR RESEARCH

Historical Research and National Archives, Souvenir to mark the Archives Week, 1992. Archival Documents for Research. p.P27.







81 views0 comments
Post: Blog2_Post
bottom of page